பாளை.யில் மருத்துவமனை ஊழியரிடம் பைக் பறிப்பு
பாளையங்கோட்டையில் தனியாா் மருத்துவமனை ஊழியரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா் முருகானந்தன் ( 21). இவா் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் ஆய்வக தொழில்நுட்பநராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா் சம்பவத்தன்று தனது நண்பருடன் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் அருகே பைக்கில் சென்றபோது, எதிரே ஒரே பைக்கில் வந்த 3 போ் வழிமறித்தனராம்.
பின்னா் மறைத்துவைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரது பைக்கை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினராம். இது குறித்து முருகானந்தம் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.