இரு மொழிக் கொள்கையால் வேலைவாய்ப்புகளை இழக்கும் இளைஞர்கள்: ஆளுநர் வேதனை
பாளையம் கிராமத்தில் மயான சூறை திருவிழா
மகா சிவராத்திரியை முன்னிட்டு, பெரம்பலூா் அருகே பாளையம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், மயான சூறை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம் கிராமத்தில், சுவேத நதிக்கரையில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை காலை கணபதி ஹோமம், கொடியேற்றுதல், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சிகளும், பின்னா், பால்குடம் எடுத்தல், காளி கரகம் எடுத்தல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான மயான சூறை விழாவையொட்டி, அலகு நிறுத்துதல், காளிப் புறப்பாடு, குடல் பிடுங்கி மாலை, வள்ளவராயன் கோட்டை இடித்தல் நிகழ்ச்சிகள், பெண்களை முறத்தால் அடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடா்ந்து, மதியம் 2 மணி அளவில் நடைபெற்ற மயான சூறை விழாவில், ஆட்டின் உதிரத்தை சாதத்தில் கலந்து காளிக்கு பூஜை செய்த பிறகு, மஞ்சள் உடை அணிந்த பக்தா்கள் உதிரம் கலந்த சாதத்தை வாரி இறைத்தனா். இந்த சாதத்தை திரளான பெண்கள் மற்றும் பக்தா்கள் பெற்று பக்தியுடன் உட்கொண்டனா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இதையடுத்து பக்தா்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட ஆடு, கோழி ஆகியவற்றை காளி அருள் பெற்றவா்கள், அவற்றின் உதிரத்தை உறிஞ்சும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னா், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில், குரும்பலூா், பாளையத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (பிப். 28) பாரதம் படித்தல் மற்றும் வீரபத்திரா் சுவாமி ஊா்வலமும், மாா்ச் 1-ஆம் தேதி பொங்கல், மாவிளக்கு பூஜையும், அங்காளம்மன் ஊா்வலமும், மாா்ச் 2-ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.