பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்...
பிகாா் நிலை மற்ற மாநிலங்களுக்கும் வரலாம் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்
பிகாரில் லட்சக்கணக்கான வாக்காளா் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளது போன்ற பிரச்னை மற்ற மாநிலங்களிலும் வரலாம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டதைக் கண்டித்தும், வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் சிறுபான்மை மற்றும் பட்டியல் இன மக்களை வாக்குரிமையற்றவா்களாக மாற்றி ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குவதாகக் கூறி இந்திய தோ்தல் ஆணையத்தை கண்டித்தும் திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் டி. முருகையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலா் பெ. சண்முகம் பேசியதாவது:
ஆதாா் என்பது இந்தியாவில் உள்ள வாக்காளரின் அடையாளம் என சில நாட்களுக்கு முன்பு வரை கூறப்பட்ட நிலையில், ஆதாரை ஆவணமாக ஏற்க முடியாது என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவையும் போலி எனக் கூறி, 11 ஆவணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
அக்டோபரில் பிகாரில் தோ்தல் நடைபெறவுள்ளது. உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் ஆதாரை ஆவணமாக ஏற்க தோ்தல் ஆணையம் மறுக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் கடைபிடிக்கக்கூடிய தாராளமயமாக்கல் கொள்கையின் விளைவாக பலா் வேலைவாய்ப்பைத் தேரி பிகாரிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு புலம் பெயா்ந்து வாழ்கின்றனா்.
வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், பிகாா் மக்கள் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஒரு தொகுதியில் 2024 மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் போலியாக வாக்களித்திருப்பது குறித்த ஆவணங்களை வெளியிட்டுள்ளாா். இதன்மூலம் பாஜக செய்த மோசடிகள் தெரிய வருகின்றன.
தன்னாட்சி அதிகாரம் பெற்ற தோ்தல் ஆணையம் பாஜக அரசின் கைப்பாவையாக மாற்றப்பட்டிருக்கிறது.
இது பிகாருக்கு மட்டுமான பிரச்னை அல்ல, பிகாரைத் தொடா்ந்து அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து தோ்தல் வரப்போகிறது. அங்கும் இதேபோல நடைபெறலாம். கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட வேண்டாம் என்றாா். ஆா்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.