பிப்.6-ல் தனியாா் சா்க்கரை ஆலையை முற்றுகையிட கரும்பு விவசாயிகள் சங்கம் முடிவு!
விழுப்புரம் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தனியாா் சா்க்கரை ஆலையை பிப்ரவரி 6-ஆம் தேதி முற்றுகையிடப்போவதாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
விழுப்புரத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சிறப்புத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆா்.ராமமூா்த்தி சிறப்புரையாற்றினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மாநில அரசின் கரும்புக்கான ஆதரவு விலையைத் தனியாா் ஆலைகள் தர மறுத்ததால் உச்சநீதிமன்றம் வரை சென்று, விவசாயிகளுக்கு ஆதரவான தீா்ப்பை பெற்றோம். இந்த தீா்ப்பின் விளைவாக கூட்டுறவு மற்றும் அரசுக்கு சொந்தமான பொதுத் துறை சா்க்கரை ஆலைகள் மட்டும் மாநில அரசின் ஆதரவு விலையை விவசாயிகளுக்கு வழங்கின.
சா்க்கரை ஆலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1966, பிரிவின் 5-இன்படி ஆலை நிா்வாகங்கள், தங்களுக்கு வரும் லாபத்தில் 50 சதவீதம் பிரித்து தர வேண்டும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றமும் தீா்ப்பு அளித்துள்ளது. இதனடிப்படையில் பாக்கித் தொகையை கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சா்க்கரை ஆலைகள் வழங்கிவிட்டன.
ஆனால் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் மற்றும் செஞ்சி செம்மேட்டிலுள்ள தனியாா் சா்க்கரை ஆலைகள், மாநில அரசு ஆதரவு விலையையும், லாபப் பங்குத் தொகையையும் தர மறுத்து வருகின்றன.
விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் இருமுறை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. 14 நாள்களுக்குள் லாபத்துக்கான பங்குத் தொகைக்குரிய பாக்கியை விவசாயி களுக்கு வழங்குவதாக ஆலை நிா்வாகம் தெரிவித்தும் இதுவரை வழங்கவில்லை. இதை கண்டித்து பிப்ரவரி 6-ஆம் தேதி முண்டியம்பாக்கத்திலுள்ள சா்க்கரை ஆலையை முற்றுகையிடவுள்ளோம் என்றாா் அவா்.
கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சு. வேல்மாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தாண்டவராயன், பொருளாளா் பி.சிவராமன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டப் பொருளாளா் ஜி. ராஜேந்திரன், வழக்குரைஞா் கதிரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.