Custodial Death: `நிகிதாவின் புகார் முதல் சிகரெட் சூடு வரை’ - அஜித்குமார் மரண வழ...
பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் முக்கிய தலைமறைவு குற்றவாளி கைது
பாஜக நிா்வாகி பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் 2 ஆண்டுகளாக கத்தாரில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கா்நாடகத்தின் தென்கன்னட மாவட்டம், பெல்லாரே கிராமத்தில் 2022 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி தடைசெய்யப்பட்ட பாபுலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பை சோ்ந்தவா்கள் பாஜகவின் இளைஞா் அணியை சோ்ந்த பிரவீன் நெட்டாருவை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனா்.
கா்நாடகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை சீா்குலைத்து, கலவரச்சூழலை உருவாக்குவதற்காக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த கொலை வழக்கை 2022ஆம் ஆண்டு ஆக. 4 ஆம் தேதி முதல் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் இதுவரை 21 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கு காரணமாக இருந்த முக்கிய குற்றவாளியான முஸ்தபா பைச்சாா் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்து, தப்புவதற்கு உதவி செய்ததாக தேடப்பட்டு வந்த அப்துல்ரகுமானை தேசிய புலனாய்வு முகமை வெள்ளிக்கிழமை கைது செய்தது. இதன்மூலம் இந்த வழக்கில் இதுவரை 22 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியதும் அப்துல்ரகுமான் உள்ளிட்ட 6 போ் தலைமறைவாக இருந்தனா். 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அப்துல் ரகுமானை தேடிவந்த நிலையில், கத்தாரில் இருந்து வெள்ளிக்கிழமை கேரள மாநிலம், கண்ணூா் விமான நிலையத்திற்கு வந்த அவரை தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனா்.
தடைசெய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பின் தலைமை வழிகாட்டுதலின்படி கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த குற்றவாளிகளுக்கு அப்துல்ரகுமான் அடைக்கலம் கொடுத்துள்ளதோடு, உதவியும் செய்துள்ளாா். மக்களிடையே அச்சத்தையும், மத ரீதியான பதற்றத்தையும் உருவாக்கும் நோக்கில் பி.எஃப்.ஐ. அமைப்பின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவே பிரவீன் நெட்டாருவின் கொலையை திட்டமிட்டு, செயல்படுத்தியுள்ளனா்.
இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மேலும் 5 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு, தொடா்ந்து விசாரணை நடத்தி வருவதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.