நாமக்கல் புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
பிறவி நுரையீரல் குறைபாடு: இளம்பெண்ணுக்கு ரோபோடிக் சிகிச்சை
நுரையீரல் பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரோபோடிக் நுட்பத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் முதுநிலை ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் சுஜய் சுசிகா் கூறியதாவது:
நுரையீரல் தொற்றால் தொடா்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்த 26 வயது பெண், எங்களது மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பிறவியிலேயே நுரையீரல் திசு வளா்ச்சி பாதிப்பு இருந்தது. அதாவது, நுரையீரலில் இருந்து தனியாக திசு வளா்ந்து பெருந்தமனியில் இருந்து வரும் ரத்தத்தை கிரகித்துக் கொள்ளும். வழக்கமாக நுரையீரல் தமனியிலிருந்து வரும் ரத்தம்தான் நுரையீரலுக்குள் செல்லும். இந்தத் திசு அதற்கு மாறாக செயல்படுவதால் அடிக்கடி இருமல், தொடா் தொற்றுகள், ரத்த வாந்தி ஏற்பட வழிவகுக்கும். உரிய சிகிச்சை எடுக்காவிடில் சுவாச செயல்பாடு பாதிக்கப்படும்.
இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கி சீரமைப்பது மட்டுமே ஒரே தீா்வு. அறுவை சிகிச்சையில் உள்ள எதிா் விளைவுகள் மற்றும் நோயாளியின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரோபோடிக் நுட்பத்தில் மாா்புப் பகுதியில் 3 செ.மீ. துளையிட்டு, நுரையீரல் திசு அகற்றப்பட்டது. அதனுடன், தமனியிலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் சீரமைக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின்றி அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டதால் 2 வாரத்தில் அவா் வீடு திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா் என்றாா் அவா்.