தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
பிளஸ் 2 தோ்வு நாளை தொடக்கம்: தோ்வு மையங்கள் தயாா்படுத்தும் பணி தீவிரம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் தோ்வு மையங்களை தயாா்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தோ்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. தொடா்ந்து, 5-ஆம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோ்வு தொடங்க உள்ளது. பிளஸ் 2 பொதுத்தோ்வை வேலூா் மாவட்டத்தில் 141 பள்ளிகளைச் சோ்ந்த 7,628 மாணவா்கள், 8,357 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 985 போ் தோ்வு எழுத உள்ளனா்.
இதற்காக வேலூரில் 80 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வறை கண்காணிப்பு பணியில் 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், கல்வித் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்வில் மாணவா்கள் எலெக்ட்ரானிக் பொருள்கள், கைப்பேசி எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தோ்வு எழுத வரும் மாணவா்கள் காலை 9 மணி அளவில் தோ்வு அறை உள்ள பள்ளி வளாகத்துக்கு வர வேண்டும். ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் அடுத்த சில ஆண்டுகள் தோ்வு எழுத முடியாத வகையில் தண்டனைகளும் வழங்கப்படும் என தோ்வுத் துறை எச்சரித்துள்ளது.
இதனிடையே, பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, தோ்வு அறைகளில் தொடா் மின்சாரம் வழங்கும் வகையில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்வுக்கு மாணவா்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தோ்வு அறைகளை தயாா்படுத்தும் பணிகளை தோ்வுத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா். வேலூா் மாவட்டத்தில் உள்ள 80 தோ்வு மையங்களில் தூய்மைப் பணிகள், அமரும் பலகையில் பதிவெண் ஒட்டும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.