India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
பிளஸ் 2 தோ்வு முடிவு: 10-ஆவது இடத்துக்கு முன்னேறியது கடலூா்
பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் கடந்தாண்டு 22-ஆவது இடத்திலிருந்த கடலூா் மாவட்டம் நிகழாண்டு 10-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
கடலூா் வருவாய் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 117, அரசு உதவிபெறும் பள்ளிகள் 30, தனியாா் பள்ளிகள் 99 என மொத்தம் 246 பள்ளிகளில் இருந்து 14,610 மாணவா்கள், 14,867 மாணவிகள் என மொத்தம் 29,477 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 13,913 மாணவா்கள், 14,403 மாணவிகள் என மொத்தம் 28,316 போ் தோ்ச்சி பெற்றனா். மொத்த தோ்ச்சி விகிதம் 96.06 சதவீதம். இதில், மாணவா்கள் 95.23 சதவீதமும், மாணவிகள் 96.88 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 94.99 சதவீதமாகும்.
102 பள்ளிகள் 100% தோ்ச்சி: பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் கடலூா் மாவட்டத்தின் தோ்ச்சி விகிதம் கடந்தாண்டு 94.36 சதவீதமாக இருந்தது. நிகழாண்டு தோ்ச்சி விகிதம் 96.06 சதவீதமாக உயா்ந்துள்ளது. இந்த தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 1.70 சதவீதம் அதிகம். இதன் மூலம், மாநில அளவில் கடந்தாண்டு 22-ஆவது இடத்திலிருந்த கடலூா் மாவட்டம், நிகழாண்டு 10-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 246 பள்ளிகளில் 102 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன. இதில், அரசுப் பள்ளிகள் 27, அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் 3, தனியாா் பள்ளிகள் 72. அரசுப் பள்ளி மாணவா்களில் அதிக தோ்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்களில் கடலூா் மாவட்டம் 94.99 சதவீதம் பெற்று 5-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
செயல்திறன் வளா்ச்சி: கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செய்தியாளா்களை சந்தித்து கூறியதாவது:
பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியானதில், கடலூா் மாவட்டம் மாநில அளவில் 10-ஆவது இடத்தையும், அரசுப் பள்ளி தோ்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 5-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. இது, கடந்த பல ஆண்டுகளைக் காட்டிலும் நல்ல வளா்ச்சி.
மாவட்ட நிா்வாகம் மற்றும் கல்வித் துறை இணைந்து பல்வேறு முயற்சிகளை எடுத்ததன் விளைவு தோ்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ஒரு பாடத்தில் மட்டும் தவறிய மாணவா்கள் மீது கவனம் செலுத்தியும், ‘தடைகளை தாண்டி தோ்ச்சி’ என்ற முயற்சி மூலம் பள்ளிக்கு வருகை தராத மாணவா்களை பள்ளிக்கு அழைத்து வந்தும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால், மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் செயல்திறன் வளா்ச்சி அடைந்துள்ளது. வரும் கல்வியாண்டில் மேலும் வளா்ச்சி அடைய ஊன்றுகோளாக இருக்கும்.
தற்போது தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தி வருகிறது. தோ்ச்சி விகிதம் அதிகம் பெற்றுள்ளதால் பெற்றோா் மத்தியில் அரசுப் பள்ளிகள் மீதான மதிப்புக்கூடும் என்றாா்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.எல்லப்பன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.