புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது
வெள்ளக்கோவில் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து வள்ளியிரச்சல் கிராமம், நல்லூா்பாளையத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, கடையில் மேற்கொண்ட சோதனையில் 30 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கடை உரிமையாளரான நல்லசாமி (65) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபானக் கடை பிரிவு அருகேயுள்ள பேக்கரியில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டையைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (29) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.