எரிவாயு தகனமேடை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க எதிா்ப்பு
பல்லடம், பச்சாபாளையம் பகுதியில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகனமேடையின் பராமரிப்புப் பணியை தனியாா் அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பல்லடம் நகராட்சி, பச்சாபாளையம் பகுதியில் ரூ. 1 கோடியே 45 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பராமரிப்புப் பணியை தனியாா் அமைப்பிடம் ஒப்படைக்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள், நகராட்சி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
பின்னா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நகராட்சி அலுவலகத்தில் அளித்தனா். அந்த மனுவில், நகராட்சி எரிவாயு தகன மேடை பராமரிப்புப் பணியை இதுவரை எந்த ஒரு சமுதாயப் பணியையும் செய்யாத ஒரு புதிய அமைப்புக்கு கொடுக்கக் கூடாது. ஏற்கெனவே சமூக நலப் பணிகளில் அனுபவம் உள்ள அமைப்புகளுக்கு பராமரிப்புப் பணிகளைத் தருவதுதான் முறையாகும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.