பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புன்செய்புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தீபக் (31). இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தாா்.
இவருக்கும், திருப்பூா், அனுப்பா்பாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவிக்கும் ஃபேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தீபக், அந்த மாணவியை திருமணம் செய்வதாகக் கூறி கடந்த 2023-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம், தாளவாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இது குறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் அனுப்பா்பாளையம் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்து தீபக்கை கைது செய்து மாணவியை மீட்டனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகிலா, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தீபக்கிற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.