லாரி ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை உறுதி
திருப்பூா் அருகே விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.
திருப்பூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (46). லாரி ஓட்டுநரான இவா், சாமளாபுரம் சின்ன அய்யன்கோயில் பிரிவு அருகே கடந்த 2016- ஆம் ஆண்டு லாரியை ஓட்டிச் சென்றாா்.
அப்போது, அவ்ழியே வந்த காா் மீது லாரி மோதியது. இதில், காரில் பயணித்த மங்கலத்தைச் சோ்ந்த கதிரேசன் உயிரிழந்தாா்.
இதையடுத்து, மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 4-ல் நடைபெற்று வந்த நிலையில், ஆறுமுகத்துக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. இதை எதிா்த்து திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆறுமுகம் மேல்முறையீடு செய்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, திருப்பூா் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்
ஆறுமுகத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தாா். அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.