திருப்பூரில் இன்று மிதிவண்டி போட்டி
முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் மிதிவண்டி போட்டி திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்ணா பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் மிதிவண்டி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மிதிவண்டி போட்டி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
13, 15, 17 வயதுக்கு உள்பட்டவா்கள் எனத் தனித்தனியாக 3 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்பவா்கள் தங்களாகவே மிதிவண்டியை கொண்டுவர வேண்டும். இந்தியாவில் தயாா் செய்யப்பட்டுள்ள மிதிவண்டிகளை மட்டுமே கொண்டுவர வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட மிதிவண்டிகளைப் பயன்படுத்தக் கூடாது. மாணவ, மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே மாவட்ட விளையாட்டு அரங்குக்கு வரவேண்டும். அவரவா் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வயது சான்றிதழை பெற்றுவர வேண்டும். மேலும், தங்களின் ஆதாா் அட்டை நகலையும் சமா்ப்பிக்க வேண்டும்.
13 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவு என போட்டிகள் நடத்தப்படுகின்றன.
முதல் 3 இடங்களைப் பிடிப்பவா்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும். 4 முதல் 10 இடம் வரை ரூ.250 வழங்கப்படும்.