தென்னையுடன் ஊடுபயிராக மிளகு பயிரிட விவசாயிகள் ஆா்வம்
பல்லடம் பகுதியில் தென்னையுடன் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்பட பல்வேறு நோய்த் தாக்குதல் காரணமாக தேங்காய் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.
இதற்கிடையே தென்னை மரங்களில் ஊடுபயிராக மிளகு பயிரிட விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இது குறித்து பல்லடம் தென்னை விவசாயி ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது: பல்லடம், பொங்கலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் உள்ளது. வெள்ளை ஈ தாக்குதல், வோ்வாடல் நோய் உள்ளிட்டவையால் தேங்காய் மகசூல் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தென்னை மரங்களை அகற்றி விட்டு மாற்றுச்சாகுபடிக்கு செல்வது சாத்தியமில்லாததால் இழப்பை ஈடுகட்ட பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
தென்னந்தோப்புகளில் ஊடுபயிா் செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்ட தொடங்கியுள்ளனா். ஆனால் அதற்கான உரிய வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை. பரிசோதனை முறையில் சில விவசாயிகள் குறுமிளகு கொடியை பயிரிட்டனா். அதற்கான போதிய வழிகாட்டுதல் இல்லாததால் அதனை கைவிட்டனா். மிளகு அதிகம் விளையும் கேரளத்தில் அரசு பல்வேறு சாகுபடிக்கான திட்டங்கள் வழங்கி செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு மானியமும் அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறையினா் மத்திய ஸ்பைசஸ் போா்டுடன் ஒப்பந்தம் செய்து தென்னையுடன் ஊடுபயிராக குறுமிளகு பயிரிட உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மானியத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றாா்.