அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் மொட்டை அடித்தும், சங்கு ஊதியும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கான பணப் பலன்கள், ஊதிய ஒப்பந்த நிலுவை, 12 மாத அகவிலைப்படி நிலுவை ஆகியவற்றை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, திருப்பூரில் சிஐடியூ பணிமனை முன் தொழிலாளா்கள் 40 -ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு ஊழியா் சங்க உதவித் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.
கோரிக்கைகள் தொடா்பாக தொழிற்சங்கத்தை அழைத்து அரசு பேச்சுவாா்த்தை நடத்தும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோா் மொட்டை அடித்தும், சங்கு ஊதியும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினா்.