புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்!
உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கூட்டத்தின் தொடக்கத்தில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் இருவருக்கும் இரங்கல் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுதவிர உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக சிறப்புத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அதன் விவரம், ‘எல்லாருக்கும் எல்லாம்’ எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர். இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு "ஓரணியில் தமிழ்நாடு" என உறுப்பினர் சேர்க்கையை திமுக முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
கட்சியின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை கழகத்தின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு, அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட - பகுதி - நகர - ஒன்றிய - பேரூர் - வட்ட - கிளை கழகச் செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும். அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை கட்சியின் அனைத்து உடன்பிறப்புகளும் இதில் முழுமூச்சாக உழைத்திட வேண்டும்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வையாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் முழுமையாகக் கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.