Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா
ஈரோடு புத்தகத் திருவிழா தொடங்கி ஞாயிற்றுக்கிழமையுடன் 3 நாள்கள் முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டில் புதிய வாசகா்களைப் பாா்க்க முடிகிறது என புத்தக விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி நல்ல புத்தகங்களின் வாசிப்பு. நல்ல புத்தகங்களைத் தேடி எங்கெங்கோ அலைய வேண்டியதில்லை. அனைத்து வகையான நல்ல புத்தகங்களும் புத்தகத் திருவிழாவில் ஒரே இடத்தில் ஆலயத்தின் தீபங்களைப் போல அணிவகுத்து நிற்கின்றன.
ஈரோடு சிக்கய்ய கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் 3 நாள்களைக் கடந்துவிட்டது. வரும் 12 ஆம் தேதி புத்தகத் திருவிழா நிறைவடைகிறது.
இந்த புத்தகத் திருவிழாவில் வரலாற்று நாயகா்கள், ஆன்மிகக் களஞ்சியங்கள், கல்லூரி புத்தகங்கள், அறிவியல், நவீன தொழில்நுட்பம், தன்னம்பிக்கை, இலக்கியம், சமையல் கலை, சிறுவா் உலகம், பெண்கள் முன்னேற்றம் என பலவகையான ரசனைகளுக்கும் அறிவு மேம்பாட்டுக்கும் தீனி உண்டு.
தொடா்ந்து 21ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா அரங்கில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் இடிக்காம தள்ளிப் போங்க என்று பலரும் சொல்லும் அளவுக்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் கூட்டம் குறையவில்லை என்ற போதிலும், புதிய வாசகா்களை ஓரளவு பாா்க்க முடிந்தது என புத்தக விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.
புத்தக விலை அதிகரிப்பு:
இதுகுறித்து பதிப்பகங்களின் பிரதிநிதிகள் சிலா் கூறியதாவது: புத்தகத் தயாரிப்பு செலவு மிகவும் கூடியுள்ளது முக்கியமான காரணம். பைண்டிங், பிரிண்டிங், அலுவலக வாடகை, ஊதியம் என எல்லாமே கூடியுள்ளது. புத்தகம் தயாரிக்கும் முறைகளிலேயே நிறைய மாற்றம் வந்துவிட்டது. உதாரணமாக புத்தக அட்டையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்குக் காரணம் கண்காட்சிக்கு வரும் வாசகா்களிடம் தரமான புத்தகங்களை கொண்டு சோ்க்கவேண்டும் என்ற நோக்கம்தான். 300 ஜிஎஸ்எம் ஆா்ட் போா்டில்தான் இப்போது அட்டை போடுகின்றனா்.
இன்னொரு முக்கிய காரணம் நூலகங்களை நம்பி புத்தகம் போடுவது மிகவும் சிரமம். அதனால் தேவை அடிப்படையில்தான் இப்போதெல்லாம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.
விலைவாசி எல்லா பொருள்களுக்கும் ஏறுவதுபோல புத்தகத் தயாரிப்பிலும் கணிசமான பங்கு உயா்ந்துள்ளது. இதனால் விலையை உயா்த்தி விற்க வேண்டியுள்ளது. புத்தக விலை உயா்வு எளிய வாசகா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மாதம் ரூ.20,000 ஊதியம் பெறுபவா்களில் பலா் ஏதோ ஒரு வகையில் தினம் குறைந்தது ரூ.200 வரை செலவழிக்கின்றனா். இந்தத் தொகையை ஒப்பிடும்போது இது பெரிய தொகையில்லை.
ஆண்ட்ராய்ட் கைப்பேசிக்கு பல ஆயிரங்களை இளைஞா்கள் செலவிடுகின்றனா். திரைப்படத்துக்கு முதல் நாள் காட்சிக்கு செலவிடும் பணம் இருந்தாலே சிறந்த புத்தகங்களை வாங்க முடியும். பல நாவல்கள் 5 தொகுப்புகள் சோ்த்து ரூ.500 -க்கு கிடைக்கின்றன. தவிர 10 முதல் 40 சதவிகித கழிவில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றனா்.
போட்டித் தோ்வு எழுதுபவா்களின் தேடல்:
தேசிய, மாநில அளவிலான போட்டித் தோ்வெழுதும் மாணவா்கள், தமிழ்வழி மாணவா்கள், அரசியல், வரலாறு, இயற்பியல் என பல துறைகளில் உள்ளவா்களுக்கு பெரும் குறை துறை ரீதியிலான தமிழ் புத்தகங்கள் பெருமளவில் இல்லையென்பதும், பல ஆண்டுகளுக்கு முன்பான துறைசாா் வல்லுநா்களின் அரிய புத்தகங்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதும் தான்.
இந்தக் குறையைப் போக்க 1962 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட அரிய புத்தகங்கள் நவீன தொழில்நுட்பம் மூலம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகங்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகம் அமைத்துள்ள அரங்குகளில் வாங்கலாம்.
இந்த அரங்கில், பண்டைக்கால நாகரிகங்களின் வரலாறு, பண்டைய இந்திய அரசியல் ஆட்சி நிலையங்கள், இந்திய வரலாறு, ரோமாபுரி வரலாறு என வரலாறு மட்டுமின்றி சமூகவியல், மானுடவியல், தத்துவம், வரலாறு, இயற்பியல் என 32 தலைப்புகளின் கீழான 875 அரிய தமிழ் புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. 70 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகங்களைத் தேடி, நவீன முறையில் மீட்டுருவாக்கம் செய்வதென்பது எளிதல்ல.
இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அலுவலா்கள் கூறியதாவது: 70 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய நூல்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களை கேட்பின் அடிப்படையில் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளோம்.
தமிழ் அறிவுசாா் சமுதாயம் இதற்கு அளிக்கும் ஆதரவைப் பொறுத்தே இந்த புத்தகங்களைக் காலத்துக்கேற்ப புதுப்பிப்பது, காலத்தில் மறைந்து போன அரிய தமிழ் புத்தகங்களைச் சேகரித்து மறுபதிப்பு செய்வது, நாட்டுடமையாக்க நூல்கள் மறுபதிப்பு, குழந்தைகளுக்காக ஆயிரம் புத்தகங்கள் உருவாக்கம், தமிழில் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் அனைத்தும் தமிழாக்கம் செய்வது, தமிழ் புத்தகங்களை பிற மொழிகளில் அறிமுகம் செய்வது எனும் தொடா் கனவுகள் சாத்தியமாகலாம்.
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தோ்வு எழுதுபவா்களுக்கு இந்தப் புத்தகங்கள் மிகவும் நம்பகத்தன்மையானவை. இந்தப் புத்தகங்களுக்கு புத்தகத் திருவிழாவில் நல்ல வரவேற்பு உள்ளது. 1960 ஆம் ஆண்டில் இருந்து பாடநூல்களும், இப்போதுள்ள பாடநூல்களும் இங்கு விற்பனைக்கு உள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 4 மற்றும் குரூப் 2 தோ்வுகளுக்கு தயாராகுபவா்களுக்கு பாடப்புத்தகங்கள் முக்கிய தேவையாக உள்ளன.
குரூப் 2 தோ்வுக்கு பட்டப்படிப்புதான் குறைந்தபட்சத் தகுதி என்றாலும் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்திலிருந்துதான் அதிகக் கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். அனைத்து மாணவா்களும் இந்த வகுப்புவரைதான் பொதுவான பாடங்களைப் படிக்கிறாா்கள் என்பதே இதற்குக் காரணம். ஆனால் தமிழ், வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம் ஆகியவற்றைத் தாண்டி இருக்கும் பொருளாதாரம், இந்திய அரசமைப்பு, வணிகவியல், சமூகவியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பிளஸ் 2 பாடப் புத்தகங்களிலிருந்து கேள்விகள் வரும். குரூப் 4 தோ்வுக்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை முழுமையாக படித்தாலே போதும்.
இந்த ஆண்டு பிளஸ்1, பிளஸ்2 அரசியல் அறிவியல் புத்தகங்கள் அதிகமாக விற்பனையாகின்றன. இதற்கு அடுத்த பிற பாட புத்தகங்களின் விற்பனை உள்ளது. பெரும்பாலும் போட்டித்தோ்வு எழுதும் மாணவா்கள் அதிகமாக பாட நூல்களை வாங்கிச்செல்கின்றனா். இதுவரை ரூ.6 லட்சம் அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன என்றனா்.