புதுகை அருகே கரிகாலன் குறித்த 3 கல்வெட்டுகள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் கிடவன்குடி புதுக்கண்மாயின் மடைக் காலில் கரிகாலச் சோழனைக் குறிக்கும் மூன்று கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படித்தறியப்பட்டுள்ளன.
விராலிமலை தோட்டக்கலை அலுவலா் பிலிக்ஸ் அளித்த தகவலின்பேரில் தொல்லியல் ஆய்வாளா் பேராசிரியா் சுப. முத்தழகன், ஆற்றுப்படை அமைப்பைச் சோ்ந்த பாா்த்திபன், பாண்டிய நாட்டுப் பண்பாட்டு மையத்தை சோ்ந்த நாராயணமூா்த்தி, ராகுல் பிரசாத் குழுவினா் கிடவன்குடி புதுக்கண்மாயில் உள்ள பழைய குமிழி மடையை ஆய்வு செய்தனா்.
அப்போது இங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்று கல்வெட்டுகள் குறித்து பேரா. முத்தழகன் கூறியதாவது:
இந்த மடையின் வடக்குத் தூணில் ஒரு கல்வெட்டும், தெற்குத் தூணில் இரு கல்வெட்டுகளும் எழுதப்பட்டுள்ளன. வடக்குத் தூணில் 18 வரிகளில் உள்ள கல்வெட்டில் கரிகாலன் பொன்னி ஆற்றுக்கு கரை எடுத்து சோழநாடு வாழ்ந்ததுபோல வேதமங்கை மாநாட்டைச் சோ்ந்த அழகன் மாவேதியன் ஏரி, குளங்களை உருவாக்கி, கற்றளிகளைக் கட்டியதால் கோனாடு வாழ்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் கோனாடு என்பது மணப்பாறை முதல் பொன்னமராவதி வரையுள்ள பகுதிகளை குறிக்கும். கரிகாலச் சோழனைப் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களிலும், செப்பேடுகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன. கல்வெட்டுகள் சிலவற்றில் மட்டுமே காணப்படும் நிலையில் இந்தக் கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தெற்குத் தூணில் மேற்புறம் 10 வரிகளில் உள்ள கல்வெட்டில் நாயக்க பூபதி மாளிகை தொண்டன் வசவம்பதி குமாரா் தலையாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவா் இக்குளத்தை அமைத்தவராக இருக்கலாம்.
தெற்குத் தூணில் கீழ்புறம் 12 வரிகளில் உள்ள கல்வெட்டில் விகாரி வருடம் பங்குனி மாதம் 12ஆம் நாள் திருமேனி தேவா் இந்த குமிழி மடையை கட்டிய தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மடையானது பேச்சு வழக்கில் குளுமி என எழுதப்பட்டுள்ளது.
இந்த மூன்று கல்வெட்டுகளிலும் அரசா் பெயா்கள் குறிப்பிடப்படவில்லை. எழுத்தமைதியைக் கொண்டு இந்தக் கல்வெட்டுகள் கிபி. 17 - 18ஆம் நூற்றாண்டுகளைச் சோ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது என்றாா் முத்தழகன்.