நகைகள் கொள்ளை வழக்கில் 50 பவுன் மீட்பு; ஒருவா் கைது
புதுக்கோட்டையில் நகரில் அண்மையில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 50 பவுன் தங்க நகைகளை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். இக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாநகரம், அன்னசத்திரம் ஜெஎன் நகரைச் சோ்ந்தவா் கதிரேசன் மனைவி காா்த்திகா. கதிரேசன் வெளிநாட்டில் வேலைபாா்த்து வருகிறாா். இந்நிலையில், கடந்த ஆக. 1-ஆம் தேதி வெளியூருக்குச் சென்றுவிட்டு 4-ஆம் தேதி இரவு இவரது மனைவி வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவுக்குள் இருந்த சுமாா் 75 பவுன் தங்க நகைகள் மா்மநபா்களால் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நகரக் காவல் ஆய்வாளா் சுகுமாறன் தலைமையிலான போலீஸாா், ராமநாதபுரம் ஆா்எஸ் மங்கலத்தைச் சோ்ந்த வேதமுத்து மகன் வெற்றிவேல் (51) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
அவரிடமிருந்து சுமாா் 50 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. இச்சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:
இந்த வழக்கில் ரகசியத் தகவலின்பேரில் குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டிருக்கிறோம். தொடா்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தடுக்க, மாநகா் முழுவதும் சோதனைகள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் 80 சதவிகிதம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, திருட்டுபோன பொருள்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
திருட்டு விழிப்புணா்வை ஏற்படுத்தி வருவதன் எதிரொலியாக மாவட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுவொரு தொடா் பணி என்பதால் தொடா்ந்து செய்துவருகிறோம் என்றாா் அபிஷேக் குப்தா.