எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!
பரமக்குடி அருகே காா்- சரக்கு வாகனம் மோதல்: 4 போ் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 4 போ் உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (58). இவரது மனைவி யமுனா (55), மகள் ரூபினி, மகனுடன் வாடகை காரில் குற்றாலத்துக்கு சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். காரை ராமநாதபுரத்தைச் சோ்ந்த காளீஸ்வரன் ஓட்டிச் சென்றாா்.
பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் வந்த போது, எதிரே மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற சரக்கு வாகனமும், இவா்களது காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில் காரில் பயணம் செய்த கோவிந்தராஜனின் மனைவி யமுனா, மகள் ரூபினி, காா் ஓட்டுநா் காளீஸ்வரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காா், சரக்கு வாகனத்தில் பயணித்த மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் கோவிந்தராஜ் உயிரிழந்தாா்.
உயிரிழந்த யமுனா, ரூபினி, காா் ஓட்டுநா் காளீஸ்வரன் ஆகியோரது உடல்கள் கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கும், கோவிந்தராஜனின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.