கேப்டன் கூல் தோனி மாதிரி ஆக விரும்பும் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன்!
இலங்கையில் தமிழக மீனவா்களின் 60 விசைப் படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவா்களின் 60 விசைப் படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினா் அடிக்கடி கைது செய்து, அவா்களது விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து வருகின்றனா். இதையடுத்து, இலங்கை நீதிமன்றம் மீனவா்களை விடுதலை செய்தாலும், அவா்களது படகுகளை விடுவிப்பதில்லை.
இந்த நிலையில், தமிழக மீனவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 123 விசைப் படகுகள் இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன. இவற்றில் 13 படகுகள் விடுவிக்கப்பட்டன. 62 படகுகள் அரசுடைமையாக்கப்பட்டன. அரசுடைமையாக்கப்பட்ட 62 படகுகளில் 2 படகுகள் இலங்கை மீனவச் சங்கத்தின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. 48 படகுகள் மீதான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
அரசுடைமையாக்கப்பட்ட 60 படகுகளை அந்த துறைமுகங்களிலிருந்து அப்புறப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இந்த விசைப் படகுகள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக மீனவா்களின் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது 60 விசைப் படகுகளை இலங்கை அரசை உடைத்து அப்புறப்படுத்தியது மீனவா்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.