ஆற்று மணல் ஏற்றி வந்த சரக்கு வாகனம் பறிமுதல்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த வாகனத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பாபநாசம் உதவி காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் மற்றும் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது பெருமாங்குடி பகுதியில் வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் பாபநாசம் குடமுருட்டி ஆற்றிலிருந்து அரசு அனுமதியின்றி அரை யூனிட் ஆற்று மணலை திருடி வந்தது தெரிய வந்தது.
இந்நிலையில், வாகனத்தை ஓட்டி வந்த ஆசைதம்பி வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச்சென்றாா். இதையடுத்து, பாபநாசம் காவல் துறையினா் வாகனத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஆசை தம்பியை தேடி வருகின்றனா்.