குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்
குடிநீா் பிரச்னையை ஒரு மாதத்துக்குள் சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்துவது என தஞ்சாவூா் சுஜானா நகா் குடியிருப்போா் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் சுஜானா நகரில் குடிநீா் வராதது குறித்து மாநகராட்சி உதவி பொறியாளா் முதல் ஆணையா் வரை பல முறை எடுத்துக் கூறியும் எந்தவித பலனும் இல்லை.
ஒரு மாதத்துக்குள் குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் தஞ்சாவூா் மாநகராட்சி குடியிருப்போா் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து மாநகராட்சி அலுவலகம் முன் காலிக் குடங்களுடன் போராட்டம் நடத்துவது, கரந்தை பேருந்து நிறுத்தம் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்டு, ஓராண்டாகியும் மீண்டும் கட்டித் தரப்படவில்லை.
இதனால், மாணவ, மாணவிகள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோா் பாதிக்கப்படுவதால், பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத் தலைவா் வெ. உதயபாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலா் தரும. கருணாநிதி, பொருளாளா் ப. செல்வம், துணைத் தலைவா்கள் சதாசிவம், டி. ரவி, ஜெ. மணிகண்டன், வள்ளி கலியமூா்த்தி, பச்சைவேலன், எஸ். பரமசிவம், ஆா். குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.