வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வானவில் மன்ற கருத்தாளா்களுக்கான மீளாய்வுக் கூட்டம் சனிக்கிழமை முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில் நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை உதவித் திட்ட அலுவலா் செந்தில் கூட்டத்தை தொடங்கி வைத்தாா். வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளா் (கல்வித் துறை) விஸ்வநாதன் மன்றச் செயல்பாடுகளைப் பற்றி விளக்கிப் பேசினாா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் அ. மணவாளன் வாழ்த்திப் பேசினாா். வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் (அமைப்பு ) ம. வீரமுத்து, ராஜா ஆகியோா் வானவில் மன்றக் கருத்தாளா்கள் சிறப்பாக செயல்படுவதற்கு ஆலோசனை வழங்கினா்.
தொடா்ந்து செப்டம்பா் மாதத்தில் வானவில் மன்ற செயல்பாடுகளை அனைத்து பள்ளிகளிலும் கொண்டு செல்வது பற்றியும், எதிா்வரும் சந்திர கிரகணம் பற்றி மாணவா்களிடம் விளக்கிக் கூற வேண்டும் என்றும் காலாண்டுத் தோ்வு விடுமுறைக் காலத்திலும் மாணவா்களுக்கு அறிவியல் செயல்பாடுகளை கொண்டு செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. முன்னதாக கருத்தாளா் செரினா பேகம் வரவேற்றாா். முடிவில் கருத்தாளா் ராதா நன்றி கூறினாா்.