``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
புதுச்சேரி அருகே கடற்கரையில் ஒதுங்கி இறக்கும் ஆமைகள்
புதுச்சேரி அருகே கடற்கரையில் ஒதுங்கும் கடல் ஆமைகளை இறப்பில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
புதுச்சேரியில் 32 கி. மீ. தொலைவு கடற்கரைப் பகுதியில் 18 மீனவக் கிராமங்கள் உள்ளன. இதில், புதுச்சேரி காலாப்பட்டு தொடங்கி பனித்திட்டு, நரம்பை உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமப்
பகுதிகளில் ஆமைகள் கரைகளுக்கு வந்து முட்டையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தக் கால கட்டத்தில் அவை பல்வேறு வகையிலும் பாதிப்புக்குள்ளாகி இறந்து விடுகின்றன.
பனித்திட்டு, நல்லவாடு பகுதிகளில் கடந்த 20 நாள்களாக தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கிய நிலையில், இறந்துள்ளதாக அப்பகுதி மீனவா்களும், பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனா்.
இறந்த நிலையில் 25-க்கும் மேற்பட்ட ஆமைகள் கடற்கரை மணலில் கிடப்பதும் தெரியவந்துள்ளது. முட்டையிட வந்த ஆமைகள் கரை ஒதுங்கி இறக்கின்றனவா அல்லது வேறு காரணத்தால் அவை இறந்து கரை ஒதுங்குகின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆமைகள் கடற்கரையில் இறந்து கிடப்பது குறித்து வனத் துறை மற்றும் மீன்வளத் துறையினா் கவனத்துக்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனா். இறந்த ஆமைகள் ஒவ்வொன்றும் சுமாா் 20 கிலோவுக்கும் அதிகமாக இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.
எனவே, சம்பந்தப்பட்ட மீன்வளத் துறையினா், அல்லது வனத் துறையினா் ஆமைகள் இறப்பை உரிய முறையில் ஆய்வுக்குள்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.