புதுச்சேரியில் தலைக்கவச விழிப்புணா்வு நடைப்பயணம்
இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி புதுச்சேரியில் மாணவா்கள் விழிப்புணா்வு நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.
புதுச்சேரியில் ஜனவரி முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோா் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என காவல் துறை உத்தரவிட்டது. இதையடுத்து தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பொதுமக்கள் முழுமையாக இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைக்கவசம் அணிவதன்அவசியத்தை விளக்கும் வகையில் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலைத் திடலில் போக்குவரத்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொண்டு நிறுவனத்தினா் மற்றும் காவல் துறையினா் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனா். தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகள் மற்றும் தலைக்கவசத்தை ஏந்திச் சென்றதுடன், பேரணி நிறைவில் வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவோம் என உறுதிமொழி ஏற்றனா்.
முன்னதாக கடற்கரைச் சாலையிலிருந்து நடைப்பயணத்தை போக்குவரத்துப் பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் பிரவீன் குமாா் திரிபாதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். புதுச்சேரி கடற்கரை சாலையில் தொடங்கிய நடைப்பயணம் நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் தொடங்கிய இடத்தில் நிறைவடைந்தது.