ரூ.68,200 சம்பளத்தில் ரசாயன ஆய்வகத்தில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு...
புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை புதிய பேருந்து நிலையத்துக்கு வாஜ்பாய் பெயா் சூட்டப்படும்
புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் (இசிஆா்) மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பெயரில் புதிய பேருந்து நிலையம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ் காந்தி பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை சுற்றிப் பாா்த்த பிறகு முதல்வா் என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியது:
பொலிவுறு நகா் திட்டத்தின்கீழ் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சிறந்த கட்டமைப்புடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கடைகள் விரைவில் திறக்கப்படும்.
புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் விரைவில் நாட்டப்படவுள்ளது. அந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது, புதுச்சேரி நகரப் பகுதியில் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
அண்ணா திடலில் கட்டப்பட்ட சிறு விளையாட்டு அரங்கம் விரைவில் திறக்கப்படும். தற்போதைய அரசு சொன்னதை செயல்படுத்தும் வகையில் உள்ளது. அனைத்து நலத்திட்டங்களையும் விரைவாக நிறைவேற்றியுள்ளோம். சட்டப் பேரவைக் கூட்டத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றிவருகிறது.
புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம், இந்திரா காந்தி சிலை சதுக்கம் இடையேயான மேம்பாலப் பணிகள் மத்திய அரசு உதவியோடு விரைவில் தொடங்கும். அதேபோல், புதுச்சேரி, கடலூா் சாலையில் ஏஎப்டி மைதானம் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றாா்.