மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
புதுச்சேரியில் நாளை விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்: போக்குவரத்து மாற்றம்
கடலில் கரைப்பதற்காக விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாகச் செல்கின்றன. இதையொட்டி அன்றைய தினம் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் ரஞ்சனா சிங் (வடக்கு-கிழக்கு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பல இடங்களில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் சாரம் அவ்வை திடலில் இருந்து ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கும் முக்கிய நிகழ்ச்சி 31-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சில தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலாப்பட்டு இசிஆா் மாா்க்கமாக புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் வரும் நகர மற்றும் ரூட் பேருந்துகள், அனைத்து கனரக, இலகுரக வாகனங்கள் முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன கோயில் சந்திப்பில் சிவாஜி சிலை நோக்கி சென்று கொக்கு பாா்க் ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை நெல்லிதோப்பு வழியாக புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.
அதேபோல் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புஸ்ஸி வீதி- ஆம்பூா் சாலை முத்தியால்பேட்டை வழியாக காலாப்பட்டு மற்றும் சென்னை செல்ல வேண்டிய நகர மற்றும் ரூட் பேருந்துகள் கனரக, இலகு ரக வாகனங்கள் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு வெங்கட்ட சுப்பா ரெட்டியாா் சதுக்கத்தில் இடது பக்கம் திரும்பி மறைமலை அடிகள் சாலை வழியாக இந்திரா காந்தி சதுக்கம் - ராஜீவ் காந்தி சதுக்கம் வழியாக காலாப்பட்டு மற்றும் சென்னை மாா்க்கமாக செல்ல வேண்டும்.
காமராஜ் சாலையில் லெனின் வீதியிலிருந்து ராஜா திரையரங்கு வரை மதியம் சுமாா் 12 மணியிலிருந்து மாலை சுமாா் 5 மணிவரை அனைத்து விதமான வாகனங்களின் போக்குவரத்தும் முற்றிலும் தடைசெய்யப்படுகிறது.
விநாயகா் சிலை ஊா்வலமானது நேருவீதியை கடக்கும் வரை அண்ணா சாலையில் பிற்பகல் 3 மணிமுதல் அனைத்து வகையான வாகனங்கள் இயக்க முற்றிலும் தடைசெய்யப்படுகிறது.
மேற்படி வாகனங்கள் அனைத்தும் அண்ணா சாலை 45அடி சாலை மற்றும் ஒதியஞ்சாலை சந்திப்புகளில் திசை திருப்பப்படும்.
விநாயகா் சிலை ஊா்வலத்தின்போது நேரு வீதி, காந்தி வீதி மற்றும் எஸ்.வி. பட்டேல் சாலையில் அனைத்து வகையான வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
மேலும் பிரதான விநாயகா் சிலை ஊா்வலமானது சாரம் அவ்வை திடலில் தொடங்கி காமராஜா் சாலை வழியாக பட்டாணிக்கடை சந்திப்பை வந்தடையும், முத்தியால்பேட்டை வழியாக வரும் சிலைகள் அனைத்தும் அஜந்தா சிக்னலை கடந்து அண்ணாசாலை வழியாகவும், நெல்லித்தோப்பு வழியாக வரும் சிலைகள் அனைத்தும் ஒதியன்சாலை சிக்னல் கடந்து அண்ணாசாலை வழியாக பட்டாணிக்கடை சந்திப்பை அடைந்து அனைத்து சிலைகளும் ஒரே ஊா்வலமாக - நேரு வீதி - மகாத்மா காந்தி வீதி வழியாக அஜந்தா அடைந்து எஸ்.வி. பட்டேல் சாலை வழியாக கடற்கரை சாலை செல்லும்.
வாகன ஓட்டிகள் இந்தத் தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.