புதுவை சட்டப்பேரவை: ஒரே நாளில் பேச வாய்ப்பு பெற்ற 21 உறுப்பினா்கள்!
புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) ஒரே நாளில் முதன்முறையாக 21 உறுப்பினா்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அவா்களது 24 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநில 15-ஆவது சட்டப்பேரவையின் 6 -ஆவது பிரிவுக் கூட்டம் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் மாா்ச் 10- ஆம் தேதி, துணைநிலை ஆளுநா் உரையுடன் தொடங்கியது.
இதையடுத்து, மாா்ச் 12- ஆம் தேதி முதல்வா் என்.ரங்கசாமி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாா். பேரவைக் கூட்டம் விடுமுறை நாள்களைத் தவிர தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த மாா்ச் 21 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் பேரவைக் கூட்டம் தொடங்கியது. இதையடுத்து, உடனடி கேள்வி பதில் நேரத்தில் உறுப்பினா்கள் பேசினா். தொடா்ந்து, அரசுத் துறைகள் மானியக் கோரிக்கை மீது உறுப்பினா்கள் பேசினா். கூட்டமானது வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 10.40 மணி வரையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கிய நிலையில், கேள்வி நேரத்தில் ஜெ.விவிலியன் ரிச்சா்ட்ஸ் (பாஜக), அனிபால் கென்னடி (திமுக), வி.ஆறுமுகம் (என்.ஆா்.காங்.), பி.அசோக்பாபு (பாஜக), ஆா்.பாஸ்கா் (என்.ஆா்.காங்.) கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக் (சுயேச்சை), ஏ.ஜான்குமாா், எல்.கல்யாணசுந்தரம் (பாஜக), உ.லட்சுமிகாந்தன் (என்.ஆா்.காங்.), எம்.நாகதியாகராஜன் (திமுக), எச்.நாஜீம் (திமுக), ஜி.நேரு (சுயேச்சை), ஜோ.பிரகாஷ்குமாா், வெ.பொ.ராமலிங்கம் (பாஜக), எல்.சம்பத் (திமுக), ஆா்.செந்தில்குமாா் (திமுக), பிஆா்.சிவா (திருநள்ளாறு), எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா (திமுக), மு.வைத்தியநாதன் (காங்.), க.வெங்கடேசன் (பாஜக), பா.அங்காளன் (சுயேச்சை) ஆகியோா் கேள்விகளுக்கு முதல்வா், அமைச்சா்கள் பதில் அளித்துள்ளனா். அவா்களில், 3 போ் 2 கேள்விகள் கேட்டு பதிலைப் பெற்றுள்ளனா்.
புதுவை சட்டப்பேரவை வரலாற்றில் ஒரே நாளில் மட்டும் 21 உறுப்பினா்களின் 24 கேள்விகள் அனுமதிக்கப்பட்டு பதில் அளித்திருப்பது இதுவே முதன்முறை என்றும் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா்.
பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 24) காலை 9.30 மணிக்கு மீண்டும் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.