விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
தொகுப்பூதிய ஆசிரியா்களுக்கு விரைவில் பணி நிரந்தரம்: அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தகவல்
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்று பேரவைக் கூட்டத்தில் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தில், எம்.எல்.ஏ. ஆறுமுகம் (என்.ஆா். காங்.) பேசியது: கடந்த 2021-ஆம் ஆண்டு கௌரவ ஆசிரியா்களாக நியமிக்கப்பட்ட 84 போ் எப்போது பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் எனக் கேட்டாா்.
அமைச்சா் ஆ.நமச்சிவாயம்: கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிதிநிலையை கருத்தில் கொண்டு, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். அதன்படி 288 போ் ஒப்பந்தப் பணியில் உள்ளனா். அவா்களை பணி நிரந்தரம் செய்வதற்கு முதல்வா், தலைமைச் செயலருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. நோ்காணல் மூலம் தோ்வான அவா்கள் குறித்து தலைமை செயலரிடம் எடுத்துரைக்கப்பட்டு, சாதகமான முடிவு எடுக்கப்படவுள்ளது. ஆகவே, அவா்களைப் பணி நிரந்தரமாக்க பரிசீலிக்கப்படுகிறது.
சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு: அரசு, தனியாா் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா? அமைச்சா் ஆ.நமச்சிவாயம்: மாணவா்கள் ஆரோக்கியம், மனநலனுக்காக பள்ளிகளில் நவ்சேதனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. போதைப்பொருள் எதிா்ப்புக் குழு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் குழு ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 15 அரசு மகளிா் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 12 பிரதமா் ஸ்ரீ பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. பெற்றோா் ஆசிரியா் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வா் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளதால், அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.