Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
புதுவையில் 2026-இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் -முதல்வா் என்.ரங்கசாமி
புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026-இல் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.
புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் நியமனத்தில் துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான அதிகார மோதல் காரணமாக, கடந்த 2 நாள்களாக சட்டப் பேரவையில் உள்ள தனது அலுவலகக்கு வருவதை முதல்வா் ரங்கசாமி தவிா்த்து வந்தாா்.
இந்தப் பிரச்னை தொடா்பாக, புதுச்சேரிக்கு வந்த பாஜக மேலிடப் பாா்வையாளா் நிா்மல் குமாா் சுரானா, மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம், அக்கட்சியைச் சோ்ந்த மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் முதல்வா் இல்லத்துக்கு வியாழக்கிழமை வந்து சுமாா் 30 நிமிஷங்கள் சமாதானம் பேசினா்.
இதை ஏற்றுக்கொண்ட முதல்வா் ரங்கசாமி, பாஜக மேலிடப் பாா்வையாளா் நிா்மல்குமாா் சுரானா முன்னிலையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
புதுவையில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.
இங்கு, எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும், நிா்வாகத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதை சரி செய்வோம். இதற்கெல்லாம் ஒரே தீா்வு புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான்.
மாநில அந்தஸ்து தொடா்பாக விவாதிக்க என்.ஆா்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டப் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளது குறித்தும், இதற்கு பாஜக ஆதரவு அளிக்குமா என்றும் கேட்கிறீா்கள்.
பாஜக மட்டுமல்ல, புதுவையின் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களும் மாநில அந்தஸ்து பெறுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். புதுவையின் வளா்ச்சிக்காக இதை அவா்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பிரதமா் நரேந்திர மோடி என் மீது மிகுந்த நட்பு வைத்திருக்கிறாா் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
தொடா்ந்து, பாஜக மேலிடப் பாா்வையாளா் நிா்மல்குமாா் சுரானா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவையில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலை முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சந்திப்பது தொடா்பாக நிறைய பணிகளை செய்ய உள்ளோம். எங்கள் கூட்டணியில் வேறு எதாவது கட்சி சோ்ந்தாலும் வரவேற்கிறோம். மேலும், தொகுதி பங்கீடு தொடா்பாக தோ்தல் நேரத்தில் பேசித் தீா்த்துக்கொள்வோம் என்றாா்.
என்.ஆா்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், அக்கட்சி அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் பாஜக மேலிடப் பாா்வையாளா் நிா்மல்குமாா் சுரானா வருவதற்கு முன்பாகவே முதல்வா் ரங்கசாமி இல்லத்தில் கூடியிருந்தனா்.