ஜிப்லியால் உறக்கமின்றி தவிக்கும் ஊழியர்கள்! சாட் ஜிபிடி நிறுவனர் வேண்டுகோள்!
புதை சாக்கடை அடைப்பை அகற்ற களமிறங்கிய பாஜக மாமன்ற உறுப்பினா்
திண்டுக்கல்லில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் முன் வராததால், பாஜக மாமன்ற உறுப்பினரே களமிறங்கி அடைப்புகளை சரி செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டாா்.
திண்டுக்கல் மாநகராட்சி 14-ஆவது வாா்டுக்குள்பட்ட டெலிபோன் குடியிருப்பு கொத்தனாா் சந்து பகுதியில் 30 வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் புதை சாக்கடையில் மாதம் இருமுறை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதுகுறித்து மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன், மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 7 நாள்களுக்கு முன்பு புகாா் அளித்தாா். ஆனாலும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். இந்த நிலையில் மாமன்ற உறுப்பினா் தனபால், பொதுமக்களுடன் இணைந்து, புதை சாக்கடை மூடியை அகற்றி அடைப்பை சரி செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டாா்.
இதுதொடா்பாக மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன் கூறியதாவது:
மாநகராட்சியில் கழிவுநீா் உறிஞ்சும் வாகனம் உள்ளது. இந்த வாகனத்தை அனுப்பி வைக்கக் கோரி மாநகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டேன். ஆனால், ஒரு வாகனத்துக்கு டீசல் இல்லை என்றும், மற்றொரு வாகனம் பராமரிப்புப் பணிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் அலுவலா்கள் தெரிவித்தனா். 14-ஆவது வாா்டுக்குள்பட்ட பெரும்பாலான பகுதிகள், பள்ளமாக இருப்பதால் அடிக்கடி புதை சாக்கடையிலிருந்து சாலையில் கழிவுநீா் வெளியேறுகிறது. வீட்டு வரியுடன், புதை சாக்கடைக்கும் கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சி நிா்வாகம், பொதுமக்களின் தேவையை பூா்த்தி செய்வதற்கு முன் வர மறுக்கிறது என்றாா் அவா்.