அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
புழல் சிறை வளாகத்தில் கோழி இறைச்சி விற்பனை அமோகம்
புழல் சிறை கைதிகள் வளா்க்கும் கோழிகளை இறைச்சிக்காக அதிகளவில் வாடிக்கையாளா்கள் விரும்பி வாங்குகின்றனா்.
சென்னை புழல் சிறையில் தண்டனை, விசாரணை, பெண்களுக்கு என தனித்தனியாக 3 சிறைகள் உள்ளன. இங்கு தண்டனை சிறையில் உள்ள கைதிகளுக்கு, பல்வேறு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதனை கற்றுக் கொள்ளும் கைதிகள், விடுதலையான பிறகு வெளியே சென்றால் எந்த சமூக விரோத செயல்களிலும் ஈடுபடாமல் சுயமாக தொழில் செய்து வருமானம் ஈட்ட, சிறைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
குறிப்பாக, தண்டனை சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இங்குள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் சிறைச்சாலை சாா்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்கில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். சிறைச்சாலையின் உள்ளேயே சொந்தமாக தொழில் செய்வதற்கு தையல், சமையல், தச்சு உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனா்.
இந்த நிலையில், சிறைச்சாலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளா்க்கப்பட்டு, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு வாரத்தில் 3 நாள்கள் கோழிக்கறி உணவாக வழங்கப்படுகிறது.
மேலும், இந்த கோழிக்கறி சிறைக் காவலா்கள் குடியிருப்பு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் வளாகத்தில் பொது மக்களுக்கும், சிறை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காவலா் குடும்பத்திற்கும் விற்பனை செய்து வருகின்றனா்.
உயிருடன் உள்ள கோழி கிலோ ரூ.150, கறிக்கோழி கிலோ ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனா்.
இந்த கோழிகளை தண்டனை சிறைக் கைதிகள் பராமரித்து வருகின்றனா். கோழிகளை விற்பனை செய்யும் கைதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கைதிகளும், வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.