பெட்ரோல் குண்டு வீச்சு, கடும் தாக்குதல்; பாமக மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய முயற்சியா?
பா.ம.க-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளவர் ம.க. ஸ்டாலின். இவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் பதவியில் உள்ளார். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.
ம.க. ஸ்டாலின் தம்பி, வழக்கறிஞர் ராஜா, சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அதற்கு பதிலாக, கொலை சம்பவம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. ம.க. ஸ்டாலின் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பேரூராட்சி தலைவர் பதவியில் உள்ள ம.க. ஸ்டாலின் ஆடுதுறையில் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இன்று வழக்கம்போல் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கு இருந்துள்ளார். உடன் இளையராஜா, அருண் ஆகியோர் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்ற மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி ம.க. ஸ்டாலினை கொலை செய்ய முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதாரித்து கொண்ட ம.க.ஸ்டாலின் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதால் இளையராஜா, அருண் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ம.க.ஸ்டாலினை மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்று தப்பி சென்ற சம்பவம் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தனக்கு பாதுகாப்பு கேட்டு ம.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கொலை முயற்சியில் ஈடுப்பட்ட மர்ம நபர்கள் யார், எதற்காக இதை செய்தார்கள் என்பது குறித்து திருவிடைமருதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆடுதுறை பகுதி மிகவும் பரப்புடன் காணப்படுகிறது.