பெண் கொலை வழக்கு: பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது
பெண் கொலை வழக்கில் பரமத்தி பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது செய்யப்பட்டாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி, மாவுரெட்டி நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (38), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (32). அண்மையில், செல்லிடப்பேசியில் பேசிவிட்டு வருவதாக வெளியே சென்ற மணிமேகலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.
இந்த நிலையில், மாவுரெட்டியிலிருந்து மாதேசம்பாளையம் செல்லும் சாலையில் மணிமேகலை மயங்கிக் கிடந்தது தெரியவந்தது. அவ்வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் மணிமேகலை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
புகாரின் பேரில், பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில், மணிமேகலையிடம் கடைசியாக செல்லிடப்பேசியில் பேசிய நபா் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள கோம்புபாளையத்தைச் சோ்ந்த உதயகுமாா் (33) என்பதும், அவா் பரமத்தி பேரூராட்சியில் குடிநீா் விநியோகம் செய்யும் பிரிவில் வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது.
அவரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மணிமேகலையுடன் நீண்ட கால நட்பு இருந்ததாகவும், நிகழ்வன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கீழே தள்ளியதாகவும், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் அவா் இருந்ததால் அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, பரமத்தி போலீஸாா் அவரை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.