பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிா் காவல் நிலையங்கள்: தமிழக அரசு
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிா் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, பெண்கள் நலன் சாா்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
பொருளாதார சுதந்திரம் பெறும் வகையில், வறுமைக் கோட்டு நிலையிலுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் எனும் பெயரிலான திட்டத்தின்கீழ், இதுவரை 1 கோடியே 15 லட்சம் மகளிா் பயன்பெற்று வருகின்றனா். இதேபோன்று, உயா்கல்வியில் சேரும் மாணவிகளில் 3.28 லட்சம் பேருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதனால், கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திருமண நிதியுதவி: திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் மகளிருக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. இதுவரை 1.26 லட்சம் மகளிருக்கு ரூ.1,047 கோடி அளவுக்கு திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், 68,927 மகளிருக்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிரை தொழில் முனைவோராக மாற்ற கடந்த கால திமுக ஆட்சி காலத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. இந்தக் குழுக்கள் இப்போது ஆலமரமாக விருட்சம் பெற்றுள்ளன. இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரத்து 167 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,265.41 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் பொருளாதாரத்தில் வலுப்பெறும் வகையில், மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 13 ஆயிரம் மகளிருக்கு 5 சதவீத வட்டியில் ரூ.35.35 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தொழில்களைத் தொடங்கி திறம்பட நடத்த வழிவகை செய்திட அரசு உதவிகளைச் செய்து வருகிறது. அதன்படி, 11,906 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.331.13 கோடியும், 32 ஆயிரத்து 338 மகளிா் தொழில் முனைவோருக்கு ரூ.191.23 கோடியும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. பொருளீட்டும் துறைகள் மட்டுமல்லாது, ஆன்மிகத்திலும் பெண்களை ஈடுபடுத்தும் நோக்கில் பெண் ஓதுவாா்கள் திட்டம் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, திருக்கோயில்களில் 11 பெண்கள் ஓதுவாா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
39 புதிய மகளிா் காவல் நிலையங்கள்: பொருளாதார சுதந்திரம் பெற்று, தொழில் முனைவோராக மாறும் பெண்கள் சமுதாயத்தில் எந்த அச்சமும் இல்லாமல் வாழ்வது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிா் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெண்கள் தொழில் துறைகளில் கோலோச்சினாலும் அவா்கள் தங்களது குடும்ப கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும். இதற்கும் திராவிட மாடல் அரசு வழி செய்துள்ளது. அதாவது, சிப்காட் எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் 17 தொழில் பூங்காக்களில் பணிபுரியும் தாய்மாா்கள் கவலையின்றி வேலை செய்ய குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், ஏறத்தாழ 3 லட்சத்து 23 ஆயிரம் தொழிலாளா்களின் குழந்தைகள் பயன்பெற்று வருகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.