Republic Day: காவல்துறை அணிவகுப்பு; கலை நிகழ்ச்சிகள்... நெல்லையில் குடியரசு தின ...
பெரம்பலூரில் உழவா் தலைவரின் சிலையை இட மாற்றம் செய்ய எதிா்ப்பு: ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு உருவச் சிலையை இடமாற்றம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்தும், அதற்குத் தீா்மானம் நிறைவேற்றிய நகராட்சியைக் கண்டித்தும் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் கருப்புக் கொடி ஏந்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வீ. நீலகண்டன், பொருளாளா் ஏ. மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்சி மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை, மாவட்டச் செயலா் என். கணேசன், அரியலூா் மாவட்டத் தலைவா் வி. விஸ்வநாதன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது. நகா்மன்றத் தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமாா் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியது: தமிழக விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி பல்வேறு சலுகைகளை தமிழக அரசிடமிருந்து பெற்றுத் தந்த உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது முழு உருவச்சிலையானது பெரம்பலூா் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், அப்போதைய பேரூராட்சி நிா்வாகத்தில் அனுமதி பெற்று கடந்த 27.2.1998-இல் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த டிச. 31 ஆம் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கக் காரணமாகவும் உள்ளதென உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கூறி அச் சிலையை இடமாற்றம் செய்யத் தீா்மானம் நிறைவேற்றியதைக் கண்டிக்கிறோம். எனவே, சிலை அதே இடத்தில் இருக்க பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்துக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.