பெரம்பலூரில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் முகமது உசேன் தலைமை வகித்தாா். வனச்சரகா் பழனிகுமரன், பசுமை தூதா் கிருஷ்ணதேவராஜ் ஆகியோா் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினா்.
பின்னா் நெகிழி ஒழிப்பு, மஞ்சள் பை பயன்பாடு, மழைநீா் சேகரிப்பு, நீா் ஆதாரம், நீா் சிக்கனம், மின் சிக்கனம், மக்கும், மக்கா குப்பை பிரித்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், காற்று, நீா் மாசு படுவதை தடுத்தல் உள்ளிட்ட கருத்துகளை மையமாகக் கொண்டு, பாடல், நடனம், நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களிடையே விநியோகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை மேலாளா் செல்வகுமாா், அறக்கட்டளை பொறுப்பாளா்கள் திவ்யா, முத்தமிழ்ச்செல்வன், மகேஸ்வரி, ஓய்வு பற்ற கல்வி அலுவலா் என். ஜெயராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, துறைமங்கலம், குரும்பலூா் மற்றும் வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரி ஆகிய பகுதிகளில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.