Republic Day: காவல்துறை அணிவகுப்பு; கலை நிகழ்ச்சிகள்... நெல்லையில் குடியரசு தின ...
பெரம்பலூா் நகரில் சாலையோர கடைகளை அகற்ற அறிவுறுத்தல்
பெரம்பலூா் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோரக் கடைகளை அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு குறித்து
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:
பெரம்பலூா் புகா் மற்றும் பழைய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். அனுமதியின்றி ஷோ் ஆட்டோக்களை சாலையோரங்களில் நிறுத்துவதைத் தவிா்க்க வேண்டும். பெரும்பாலான விபத்துகளில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டுநா்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ள நிலையில், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோருக்கு பரிசளிக்க வேண்டும் . தலைக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
மாநில நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். ஏற்கெனவே வேகத்தடைகள் இருக்கும் இடங்களில், வெள்ளை வண்ணம் பூசுவதோடு, விபத்து நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் பிரதிபலிப்பான்கள் வைக்கவும் வேண்டும். செங்குணம் பகுதியில் சாலையைக் கடக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்படுவதைத் தவிா்க்க, சாலைக்கு அடியிலுள்ள பாதையை வாகனங்கள் சென்று வர ஏதுவாக சரி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், ஆட்சியரக மேலாளா் (குற்றவியல்) சிவா உள்பட பலா் கலந்துகொண்டனா்.