பைக் மீது லாரி மோதி மாணவா் உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது மணல் லாரி, மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயம் அடைந்தாா்.
காந்துாா் பகுதியைச் சோ்ந்த செந்தில் மகன் பரணி(17). திருவள்ளூா் அருகே மப்பேடு அடுத்த பண்ணுாரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் தனது உறவினருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளாா்.
பின்னா் பிற்பகலில் தனது வகுப்பில் படிக்கும் நண்பரான பிஞ்சிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ஹேம்நாத்( 17) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சுங்குவாா்சத்திரம் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாா்களாம்.
அப்போது பள்ளி அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற மணல் லாரியை முந்த முயன்ற போது இரு சக்கர வாகனத்தின் கண்ணாடி லாரியில் உரசியதில் விபத்து ஏற்பட்டது.
இதில் நிலை தடுமாறி இரு சக்கர வாகனம் கீழே விழுந்த்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரணி உயிரிழந்தாா். இதில் ஹேம்நாத் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.
இதுகுறித்து தகவலறிந்த மப்பேடு போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.