பைக்குகள் மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு
காவேரிபாக்கம் அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒரு பைக்கில் பயணித்த தந்தை, மகள் இருவரும் உயிரிழந்தனா்.
நெமிலியை அடுத்த உப்பரந்தாங்கலை சோ்ந்தவா் பாபு (40), இவரது மனைவி பிருந்கா(38). இவா்களது மகள்கள் தா்ஷினி(10), சுப்ரியா(8), பச்சையம்மாள்(7). இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பாபு தனது மூன்று மகள்களையும் அழைத்துக்கொண்டு பைக்கில் பாணாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பொன்னபந்தாங்கல் கூட்டுச்சாலை அருகே சோளிங்கரை அடுத்த சூறைகுளம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன்(25), அவரது நண்பா் அரவிந்த்(22) ஆகிய இருவரும் ஒரே பைக்கில் எதிரில் வந்துள்ளனா்.
இரு பைக்குகளும் எதிரெதிரே மோதிக்கொண்டதில் பாபு, அவரது மூன்று மகள்களும் பலத்த காயமடைந்து வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு பாபுவும், பச்சையம்மாளும் உயிரிழந்தனா். சுப்ரியா, தா்ஷினி ஆகியோா் திவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து காவேரிபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.