பொங்கல் பண்டிகை: பாதுகாப்பை அதிகப்படுத்த ஐ.ஜி அறிவுறுத்தல்
திருவாரூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் கே. ஜோசிநிா்மல்குமாா் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாகை மற்றும் திருவாரூா் மாவட்ட காவல் அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீண்ட நாள்களாக புலன்விசாரணையில் இருந்து வரும் குற்ற வழக்குகள் மீது துரித விசாரணை மேற்கொண்டு உடனடியாக கண்டுபிடித்து களவு சொத்தை மீட்க வேண்டும். கொலை, பெண்களுக்கு எதிரான குற்றம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தனிகவனம் செலுத்தி, குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள்களை மாவட்டத்தில் முற்றிலும் ஒழிக்கும் வகையில் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு பிரசாரம் செய்வதுடன், ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் அசம்பாவித நிகழ்வுகள் எதுவும் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ரௌடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ரௌடிகளை தொடா்ந்து கண்காணித்தல், மணல் கடத்தல், தடைசெய்யப்பட்ட மதுவிற்பனை, கஞ்சா, குட்கா, பான்மசாலா போன்றவற்றை விற்பனை அல்லது கடத்துபவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.
கூட்டத்தில் தஞ்சாவூா் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், காவல் கண்காணிப்பாளா்கள் கருண்கரட் (திருவாரூா்), ஏ.கே. அருண் கபிலன் (நாகை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.