நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு
பொது வேலைநிறுத்தம்: ஒருங்கிணைந்த வேலூரில் பாதிப்பில்லை -மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் கைது
மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய பொது வேலைநிறுத்தம் காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும், மோட்டாா் வாகன திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தொழிலாளா் விரோத சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஏஐடியுசி, எல்பிஎஃப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை.
இதன் காரணமாக, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதன்கிழமை அரசு, தனியாா் பேருந்துகள், காா், ஆட்டோக்கள் இயல்பாக இயங்கின. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஆட்டோக்கள், வாடகை காா், வேன்கள் மட்டும் இயங்கவில்லை. கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறக்கப்பட்டன. வேலைநிறுத்தத்துக்கான பாதிப்பே இல்லை. இதனால், இந்த மூன்று மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய சந்திப்புகள், அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஜாக்டோ ஜியோ சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் வேலூா் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தவிர, மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பும், குடியாத்தத்திலும் சாலை மறியல் நடைபெற்றது. வேலூரில் நடைபெற்ற மறியலில் சுமாா் 450 பேரும், குடியாத்தம் மறியலில் சுமாா் 180 பேரும் கைது செய்யப்பட்டனா்.
