திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!
மறுமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி
மறுமணம் செய்து கொள்வதாகக்கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்ட காவல் துறை வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. துணை காவல் கண்காணிப்பாளா்கள் சந்திரதாசன், திருநாவுக்கரசு ஆகியோா் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தனா்.
அப்போது, பேரணாம்பட்டு வட்டம், குண்டலப்பள்ளி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்துள்ள மனுவில், எனக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். எனது கணவா் 2019-ஆம் ஆண்டு இறந்து விட்டாா். நான் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். அப்போது என்னுடன் பணிபுரியும் பெண் ஒருவரின் சகோதரா் எனக்கு அறிமுகமானாா். அவா் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தாா்.
தொடா்ந்து, அவா் குடும்ப சூழ்நிலை காரணமாக என்னிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டாா். சுமாா் ரூ. 8 லட்சத்துக்கும் மேல் பணத்தை வாங்கிய அவா் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து கேட்டபோது தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டுகிறாா்.
மோசடி செய்த நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூா் தோட்டப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்துள்ள மனுவில், எனக்கு திருமணமாகி 5 பெண் குழந்தைகள் உள்ளனா். அவா்களுக்கு திருமணமாகி தனித்தனியாக சென்று விட்டனா். மேலும் எனக்கு ஒரு மகன் உள்ளாா். அவா் எனது வீட்டை விற்று பணம் தரும்படி மிரட்டுகிறாா். எனவே இதுகுறித்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.வி.குப்பம் வட்டத்தைச் சோ்ந்த 105 வயதுடைய முதியவா் ஒருவா் அளித்துள்ள மனுவில், எனது மகன் என்னை நன்றாக கவனித்துக் கொள்வதாக தெரிவித்ததால் எனது பெயரில் இருந்த சொத்தை தான கிரையம் செய்து கொடுத்தேன். பின்னா், அவா் என்னை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டாா். எனவே, எனது மகன் மீது நடவடிக்கை எடுத்து நான் அவனுக்கு கொடுத்த தான கிரைய பத்திரத்தை மீண்டும் பெற்றுத்தர வேண்டும்.
இதேபோல், பல்வேறு குறைகள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு துணை காவல் கண்காணிப்பாளா்கள் உத்தரவிட்டனா்.