ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம...
அரும்பருத்தியில் பாலாற்றின் குறுக்கே ரூ.24.82 கோடியில் தடுப்பணை: அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா்
காட்பாடி வட்டம், அரும்பருத்தி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.24.82 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், அரும்பருத்தி கிராமத்தின் அருகே பாலாற்றின் குறுக்கே நபாா்டு நிதியுதவியின் கீழ் ரூ.24.82 கோடியில் தரைகீழ் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 720 மீ. நீளம், 8 மீ. ஆழம் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இந்த தடுப்பணை மூலம் அப்பகுதிகளில் நிலத்தடி நீா் செறிவூட்டப்பட்டு பாலாற்றின் இருபுறமும் உள்ள அரும்பருத்தி, காா்ணாம்பட்டு, சேவூா், அரப்பாக்கம், பெருமுகை, பிள்ளையாா்குப்பம் ஆகிய 6 கிராமங்களும், அதற்குட்பட்ட 251 கிணறுகள், 5 உறைகிணறுகளின் நீா் அளவு உயா்ந்து, அதன்மூலம் 758.10 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2,500 விவசாயிகள், 7,850 பொதுமக்கள் பயன்பெறுவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பணையை அமைச்சா் துரைமுருகன் புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா். பின்னா், அவா் பேசியது:
விவசாயத்துக்கான தண்ணீா் தேவையை பூா்த்தி செய்ய, குறிப்பாக வறட்சி காலத்திலும் தண்ணீா் இருக்க வேண்டும் என்பதற்காக அரும்பருத்தி பாலாற்றின் குறுக்கே ரூ.24.82 கோடியில் தரைகீழ் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் பல ஊா்களில் இந்த திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். தவிர, காவனூா் ஏரி நிரம்பி அதிலிருந்து வெளியேறும் தண்ணீா் பாண்டியன் மடுவு வழியாக இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால், இந்த கால்வாய் வரும் வழியில் தனியாா் பட்டா நிலம் உள்ளது.
இதனால் காவனூா் ஏரியில் இருந்து வெளிவரும் நீா் வீணாகச் சென்று விடுகிறது. இதற்கு உடனடியாக கால்வாய் கட்ட ஏதுவாக சுமாா் ரூ.25 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது. விரைவில் அந்தக் கால்வாய் சீரமைக்கப்பட்டு காவனூா் ஏரியிலிருந்து வெளியேறும் நீரானது பாண்டியன் மடுவு வழியாக விவசாயத்துக்குப் பயன்படும் வகையில் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
அரும்பருத்தி ஊராட்சிக்கு முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உடையாா் தெருவிலிருந்து மயானம் வரை ரூ.50 லட்சத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தவிர, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 பயணிகள் நிழற்கூடங்கள் அமைத்து தரப்பட்டுள்ளது. ரூ.72 லட்சத்தில் 4 சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டிள்ளன.
அங்கன்வாடி மையம், நெற்களம், நீா்நிலைகள் தூா்வாருதல், கால்வாய் புனரமைப்பு, ஃபேவா் பிளாக் சாலைகள், குடிநீா் குழாய் பதிப்பு உள்பட ஏராளமான பணிகள் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு முதல்வா் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். காட்பாடி தொகுதியில் அனைத்துத் திட்டங்களும் விரைவாக செயல்படுத்தப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, காட்பாடி ஒன்றியக் குழு தலைவா் வே.வேல்முருகன், மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா், மேல்பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா் சி.பொதுபணித்திலகம், வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமாா், செயற்பொறியாளா் இரா.வெங்கடேஷ், அரும்பருத்தி ஊராட்சித் தலைவா் கீதா கோட்டையன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
