OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அத...
பொம்மை துப்பாக்கியைக் காட்டி நகை கடையில் கொள்ளையடித்த ராணுவ வீரர் கைது!
தில்லியில் பொம்மைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி நகை கடையைக் கொள்ளையடித்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தில்லி ஃபார்ஷ் பஜாரில் உள்ள நகைக் கடை ஒன்றில் ஜூலை 19 ஆம் தேதி நகை கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் சிசிடிவியைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கொள்ளையன் கைது
தில்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்தது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கெளரவ் யாதவ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய பிரதேசத்துக்கு விரைந்த தனிப்படை காவலர்கள் கெளரவ் யாதவை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
மேலும், கெளரவ் யாதவ், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் என்பதும் விடுமுறையில் வந்தபோது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்த அவர், 2025 இல் பயிற்சியை முடித்து, பஞ்சாபில் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
கொள்ளை ஏன்? திட்டமிட்டது எப்படி?
கெளரவ் யாதவை கைது செய்த தில்லி காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு கொள்ளை குறித்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
தில்லி காவல்துறை துணை ஆணையர் கூறியதாவது:
”பஞ்சாபில் பணியில் இருந்த கெளரவ் யாதவுக்கு விடுமுறை கிடைத்த நிலையில், கடந்த ஜூலை 18 ஆம் தேதி மத்திய பிரதேசம் செல்லும் ரயிலுக்காக தில்லியில் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் கொள்ளை அடிப்பதற்கான திட்டத்தை தீட்டியுள்ளார். சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
தில்லியில் உள்ள ஒரு கடையில் பொம்மை துப்பாக்கியை வாங்கிய கெளரவ், நகை கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அவரிடம் இருந்து நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.