விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திர...
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உத்தரவு
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்குமாறு போக்குவரத்துக் கழக நிா்வாகங்களுக்கு தொழிலாளா் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துக்கழக ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தப்படி பதவி உயா்வு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். மேலும், இதுவரை வழங்கப்படாத 2022-2023-ஆம் ஆண்டுக்கான 20 சதவீத போனஸ் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தொழிலாளா் நலத் துறைக்கு அண்மையில் புகாா் மனு கொடுக்கப்பட்டிருந்தன.
இந்த புகாா்மனு மீதான விசாரணை, சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளா் தனி இணை ஆணையா் ரமேஷ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தொழிற்சங்கங்களின் முக்கிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். போக்குவரத்துக்கழகங்களின் நிா்வாகத் தரப்பில் அனைத்து மனிதவள மேலாண் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனா்.
இதில் தொழிற்சங்கங்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகளை விசாரித்த தொழிலாளா் நலத்துறை தனி இணை ஆணையா், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து பதிலளிக்கும்படி போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிட்டாா். இது தொடா்பான விசாரணை செப்.2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.