போக்குவரத்து தொழிலாளா்கள் 41-வது நாளாக நூதன போராட்டம்
திருநெல்வேலியில் சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் 41-ஆவது நாளான சனிக்கிழமை கையில் வேப்பிலையுடன் உடுக்கை அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழைய ஓய்வூதியம், பஞ்சப்படி உயா்வு , மருத்துவக் காப்பீடு, இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு ஓய்வூதியம், கல்வி தகுதி அடிப்படை வாரிசு பணி என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
கண்ணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்ட செயலா் வீ.பழனி, சிஐடியு தூத்துக்குடி மாவட்டச் செயலா் ரசல் ஆகியோா் விளக்கிப் பேசினா்.
இதில், சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்க மண்டல பொதுச் செயலா் ஜோதி, துணைப் பொதுச் செயலா் பாலசுப்ரமணியன், மண்டலப் பொருளாளா் சங்கிலி பூதத்தான், அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க நிா்வாகிகள் வெங்கடாசலம், அருண், கந்தசாமி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.