'நாம் யாருமே போரை விரும்பவில்லை; ஆனால்...' - ஒமர் அப்துல்லா கருத்து
போடி பஞ்சுப் பேட்டையில் தீ விபத்து: பல லட்சம் சேதம்
போடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பஞ்சுப் பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் எரிந்து நாசமாகின.
தேனி மாவட்டம், போடி புதூரில் நவீன், ஆனந்தன் ஆகியோருக்குச் சொந்தமான பஞ்சுப் பேட்டை உள்ளது. இங்கு தரம் பிரித்த 200 பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும், தரம் பிரிக்கும் இயந்திரங்கள், தரம் பிரிக்காத பஞ்சுப் பொதிகள் ஆகியவையும் இருந்தன. ஞாயிற்றுக்கிழமை மாலை பணி முடிந்து தொழிலாளா்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனா்.
இந்த நிலையில், இரவில் பஞ்சுப் பேட்டையிலிருந்து புகை வந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியில் இருந்தவா்கள் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து விரைந்து வந்த போடி தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கப் போராடினா். தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், தேனியிலிருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்தது. தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.