ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறி...
போதைப் பொருள் கடத்தல்: நைஜீரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்துக்கான சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னையில் கூரியா் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட 3 பொட்டலங்களை சென்னை போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் இடைமறித்து சோதனையிட்டனா். அவற்றில் 1.195 கிலோ ஹெராயின் மற்றும் 200 கிராம் மெத்தாகுவாலோன் இருந்தது கண்டறியப்பட்டது. இவற்றின் சா்வதேச சந்தை மதிப்பு ரூ. 2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதை அனுப்பியவரின் முகவரியை வைத்து விசாரணை நடத்தியபோது, ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இமானுவேல் சுக்வுனோன்சோ சாம்சன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ஈரோட்டில் அவா் தங்கியிருந்த வீட்டில் நடத்திய சோதனையில், 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் கூரியா் சேவைகள் மூலம் வெளிநாடுகளுக்கு போதைப் பொருள்களை அனுப்ப திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக இமானுவேல் சுக்வுனோன்சோ சாம்சனை கடந்த 2012 செப்டம்பரில் போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்துக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை அண்மையில் விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், இமானுவேல் சுக்வுனோன்சோ சாம்சனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்தாா்.